Follow Me on Twitter
Slideshow Image 1

Recent Posts

Sunday, April 19, 2009

கோபல்ல கிராமம்

பேய்க்காற்று வீசிக்கொண்டிருந்த ஒரு மாலை நேரம். தெற்கிலிருந்து வீசும் காற்று ஒரு ஊமையனின் விசும்பல் போல் என் கிராமத்து வீதிகளை மெல்ல சூழ்கிறது. தென்னை மரத்தின் இலைகள் எதிர்காற்றில் நடந்துவரும் பெண்ணின் கூந்தல் போல் காற்றின் திசையில் நீள்கிறது. கிராமத்தின் தெருக்களில் மண்டிக்கிடக்கும் மஞ்சள் புழுதியின் துகள்களில் கொஞ்சம் என் வீட்டு முற்றத்தில் வந்து நிறைகிறது. மின்சாரமில்லாமல் இருளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் என் வீட்டின், நீண்ட திண்ணையில் அமர்ந்தபடி வானம் பார்த்துக்கொண்டிருக்கிறேன் நான். என் கைகளில் ஒரு சிறிய புத்தகம், அதில் இன்னும் மிச்சமிருக்கிறது சில ஒற்றை பக்கங்கள். ஒரு பயணத்தின் பொது, அரசுப் பேருந்தின் ஜன்னலருகில் அமர்ந்தபடி படிக்கத்துவங்கிய ஒரு புத்தகம், கீ.ரா எழுதிய கோபல்ல கிராமம்.புத்தகத்தில் ஒரு சிறிய கிராமம் அதன் வீதிகளில் உலவும் யதார்த்த மனிதர்கள் அவர்கள் வாழ்வோடு நிகழும் சம்பவங்கள், அச்ச்ம்பவங்களின் மூலம் கூறப்படும் ஓர் மறையும் வாழ்கை முறையின் மேன்மை. கற்பனை கோபல்ல்மும் என் கண்முன் காற்றுடன் குலவும் என் கிராமமும் இணையும் ஒரு புள்ளியில் நின்றுகொண்டு ஏதேதோ சிந்தனை ஓட்டத்தில் திளைக்கிறது என் மனம்.கூரை ஓடுகளின் மத்தியில் ஒளிந்துகொண்டிருக்கும் புழுதி, காற்றின் ஊடுருவலில் வெளிப்பட்டு தோள்களிலும் திறந்து கிடக்கும் புத்தகத்திலும் சரம் சரமாக கரும் பூக்கள் போல நிறைகிறது. மேலே வானில் காற்றடிக்கும் திசையில் சில பழுப்பு நிற மேகங்கள், எந்நேரமும் மழை வரும். மழைக்கும் கிராமத்திற்கும் உள்ள உறவு மிக பழமையானது, மழைக்கு முந்தய காற்று ஓர் தூதுவனை போல் மழை வரும் செய்தி கூறி கிராமத்தை அதன் அயர்ச்சியில் இருந்து எழுப்பும், பின் காற்றோடு சிற்றின்பம் கொள்ளும் கிராமம் எழுப்பும் சில தனித்துவமான ஒலிகளை. வானில் இருந்து இறங்கி வீதியில் உலவும் காற்றின் தொடர்பில் மரங்கள் எழுப்பும் ஒலி, வீட்டின் கூரைகளில் தட தடக்கும் காற்றின் இரைச்சல், இரைச்சலுக்கு பயந்து அலறும் தூரத்து வீட்டு ஆநிரைகள், தாழிகள் அவிழ்ந்து காற்றோடு போராடும் மர ஜன்னல்கள், வீடு திரும்பாத சிறுவனின் நிலை அறியாமல் காற்றை சபிக்கும் எதிர் வீட்டு பாட்டியின் பெருமூச்சு என்று சிறுதும் பெரிதுமாய் கூடும் ஓசைகள். காற்றின் ரீங்காரம் சூழ என் கவனம் மீண்டும் புத்தகத்தில் நிறைகிறது. கோபல்ல கிராமம், பல நாட்களுக்கு பின் நான் படித்த ஓர் தனித்துவமான எழுத்து. எழுத்து எனும் பெருவட்டத்தின் எல்லைகளை மீறத் துடிக்கும் ஓர் எழுத்து. இதனை தூரதேசத்தில் இருந்து இங்கே நம் மண்ணில் வந்தமரும் ஓர் சமூகத்தின் கதை எனலாம், அல்லது கரிசல் மண்ணின் ஒரு காலத்தில் வாழ்ந்த சில மனிதர்களின் வாழ்கை குறிப்பு எனலாம், அல்லது கிராமத்து வாழ்கையின் நுணுக்கமான செயல் முறைகளை விழகும் ஓர் அயுவு கட்டுரை எனலாம், அல்லது நம்மை விட்டு நீங்கி கொண்டிருக்கும் ஓர் கடந்தகாலத்தை போதித்து வெய்த பெட்டகம் எனலாம். ஏனோ இது ஒரு புத்தகமாக படவில்லை எனக்கு, கரிசல் காட்டில் அமர்ந்து மண்ணை கைகளில் அள்ளிக்கொண்டிருக்கும் ஓர் பழைய கிழவன், காற்று வாக்கில் கூறிசெல்லும் கதைகளே இவை என்று படுகிறது. ஓர் மரத்தடியில் சாய்ந்தபடி நமக்கு அவன் தன் சமூகத்தின் வரலாறு கூறுகிறான், நேர்கோட்டில் அல்ல, மையமாக அல்ல, அவன் தன் மனம் போன போக்கில் கதை சொல்கிறான், எங்கோ தொடங்கி எங்கோ முடிக்கிறான், சிறுவனை போல அமர்ந்து அவன் சொல்லும் கதைகளை கற்பனை செய்கிறேன் நான். கீ.ரா எனும் அந்த மனிதன் கூறும் கதை கால மாற்றத்தின் மேல் எழுதப்பட்டுள்ளது, நிலை கொள்ளாத மழை நேர காற்று போல அது தன் திசையில் அலைகிறது, உன் கை பிடித்து உன் வேர்களுக்கு அருகில் உன்னை இட்டு செல்கிறது. கோபல்லத்தில் கதை என்று ஒன்று தனியே இல்லை, சம்பவங்களின் கூட்டு நிகழ்வாய் நீள்கிறது எழுத்து. பகட்டுத்தனம் இல்லமைல் பேச்சுமொழியில் சொல்லப்படும் கதைகள். மேலோட்டமான வாசிப்பிற்கு இது ஓர் அர்த்தமின்மையை கூட கற்பிக்கலாம், கோட்டோவியத்தில் கோடுகளை காணும் கண்களுக்கும் கலையை காணும் கண்களுக்கும் உள்ள மாற்றுமை போல அர்த்தமும் அதன் இன்மையும் நம் ரசனையின் பொருட்டே அமைகின்றது, ஆம் மனதின் ஆழமே படைப்பின் ஆழம். A good literature acts only as a catalyst. Koballa gramam – a very little was said in the book, but it opened up a lot more doors inside me. From the day i started with the book till this second when im writing about it, Iv e been lost in the thoughts. About all that was said and more about all that was not said. The mind and the book are little stones, and in their friction shapes up a flame, the flame lights you through the darkness. நான் கிராமத்தில் வசிக்கும் ஓர் நகரத்தான், கிராமவாழ்வின் முழுமையை அறியாதவன். நகரவாழ்வின் பொய்களை கண்டவன் கிராமவாழ்வின் உண்மையை எட்டவே முடியாத தூரத்தில் நின்று ரசிப்பவன். The peace which i feel now, sitting alone and looking at the village which is getting ready to get drenched itself can never be felt tomorrow or the day after, when i will be sitting in front of lifeless computers in the huge white tombs where i work. கிராமத்தில் வாழ்வு உண்மைக்கு மிக நெருக்கத்தில் இருக்கிறது, கோபல்லமும் அதையே நமக்கு உணர்த்துகிறது. எளிமையான அனால் உண்மையான மக்கள், இயற்கையோடும் மக்களோடும் ஒட்டி வாழும் வாழ்வு, விசித்திரமான அனால் வஞ்சனை இல்லா மனிதர்கள், இவற்றை எல்லாம் மீறும் கீ.ராவின் கையாடல் என்று இந்த கோடை நேர மழை போல மனதிற்கு மிக நெருக்கமான வசிக்கிறது புத்தகம்.

மூடிவைத்த புத்தகங்களுள் அடங்கியிருப்பது அச்சுக் கோர்த்த எழுத்துகள் மட்டும் அல்ல, ஒவ்வொரு புத்தகத்தின் உள்ளும் ஒளிந்து கிடக்கிறது ஓர் வாழ்கை, காலத்தின் ஒரு சிறு துண்டு, சில மனிதர்கள், காடு, மழை, கிராமம், நகரம் என்று ஏதேனும் ஓர் நிலப்பகுதி. ஒரு பூக்கூடையை உலுக்கினால் கொட்டும் பூக்கள் போல இந்த புத்தகத்தை உலுக்கினால் அதனில் இருந்து விழும் ஓர் கிராமம், சில வீடுகள், முதியதும் இளையதுமான சில மனிதர்கள், ஓர் ஏர் கலவை, ஒரு பிடி கரிசல் நிலம் மற்றும் சில கண்ணீர் துளிகள். கோபல்லத்தில் வரும் மனிதர்களுள் அக்கய்யா எனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார் என்றாலும், ஏனோ கழுவு மரம் ஏற்றி கொல்லப்பட்டும் திருடனின் பிம்பம் கண்ணில் பதிந்தே போயுள்ளது. புத்தக மனிதரோடு வாசகன் கொள்ளும் உருவ மிக நெருக்கமானது, அது மனிதரோடு அவன் கொள்ளும் உறவுகளை போல எதிர்பார்ப்பின் மேல் கட்டமைக்க படுவதில்லை. நிஜ வாழ்வில் அறிந்ததை விட நான் புத்தகம் மூலம் அறிந்த மனிதர்களே அதிகம். சிறு வயதில் கண்களை மூடி தனிமையில் அமரும் நொடியில் கண்ணில் விரியும் காட்ச்யில் பார்த்ததுண்டு ஒற்றை குதிரையில் அமர்ந்தபடி காவிரி கரையை கடந்து செல்லும் கல்கியின் வந்தியதேவனை, ஒரு விபச்சாரியின் வீட்டில் உறவுகொண்டிருகும் எஸ்.ராவின் சம்பத்தை, பொட்டல் நிலத்தை உளுதபடி வெற்று வானம் பார்க்கும் வைரமுத்துவின் பேயத்தேவரை, முகமூடிகள் கலைந்த நோடியில் மூலையில் அமர்ந்து தன் சுயம் தேடும் ஆதவனின் ராமசேஷனை, ஸ்ரீரங்கத்து வீதிகளில் அமர்ந்து நண்பரோடு பேச்சில் மூழ்கிய சுஜாதாவின் ரங்கராஜனை, மதுக்கோப்பையை முடித்துவிட்டு விட்டது வானம் பார்க்கும் ஜெயகாந்தனின் கங்காவை. இன்னும் மொழிகள் தாண்டி, நிறங்களை தாண்டி ஏதேதோ காலங்களில் ஏதேதோ இடங்களில் வசிக்கின்றனர் நான் அறிந்த மனிதர்கள், அவர்கள் அருகாமைக்கு செல்ல தேவைப்படுவது ஒரு விழி மூடல் மட்டும். ஏனோ இவர்கள் புத்தகத்தின் சதுர எல்லைகளை தாண்டி உயிருடன் எங்கோ எல்லைகளற்ற வெளியில் உலவுவதாகவே படுகிறது எனக்கு. இந்த மனிதர்கள் எனக்கு கற்று தந்தது/தருவதே என் வாழ்கை. நான் அறிந்த மனிதர்கள் பட்டியலில் இணைகிறார் கீ.ராவின் கோவிந்தப்ப நாயக்கர், தன் நிலை மறந்த அவரின் கற்பனைகள் என் நிலைக்கு ஒத்ததாகவே உள்ளது.

மேலே உள்ள எதோ ஒரு வரியை எழுதியபோது பெய்யதுவங்கிவிட்டது என் கிராமதிலோர் கோடை மழை.இங்கே நிருத்திக்கொள்லாம். அசைவின்றி இருக்கும் என்னைச்சுற்றிலும் நிகழ்கிறது மழையின் தாண்டவம். கிராமத்து மழை, நகர்த்து மழை போன்று அங்கங்கே பெய்வதில்லை அது மொத்தமாக எங்கேயும் பெய்கிறது. கூரையின் பழமையான இடுக்குகளின் வழி கீழிறங்கும் மழை நீர்.சாரை சாரையாக துளிகள், அவற்றை கைப்பிடித்து கூட்டிச் செல்லும் காற்று. ஈரக்கூந்தல் போல மலையில் படியும் தென்னை மர இலைகள். கண்களை மூடும் பனிமூட்ட இடை...வெளி. மழைத்துளிகள் பட்டு மெல்ல கரு நீலமாகும் வெள்ளை சுண்ணாம்புச் சுவர்கள். மழையினூடே சிலுப்பிக்கொண்டு ஓடும் தெரு நாய்.எங்கும் மெல்ல பரவி வரும் மழை வாசம், பாட்டி தரப்போகும் மழை தேநீர், மழையில் முடிவதற்குள் படித்துமுடிக்க ஒரு புத்தகம், மழையில் நனைந்தபடி சென்று ஓர் வெந்நீர் குளியல். எல்லாம் முடிந்தபின் இரவோடு பகல் கலக்கும் பொழுதில் மழை வடிந்த சாலைகளில் காலார நடக்கவேண்டும், ஈரமான தெருக்களில் ஆங்காங்கே தேங்கிஇருக்கும் குட்டை நீரில் யாரும் பார்க்காத நேரத்தில் கால் நனைக்க வேண்டும், கண்களை மூடி எனக்குள் நானே ஒரு முறை சிரிக்க வேண்டும். பின் வீடு திரும்பி, மூடிக்கிடக்கும் புத்தகத்தை கையிலேந்தி எங்கோ எங்கோ தொலைந்துபோக வேண்டும், and let it rain till then.

5 comments:

Alphonsa Berchmans said...

azhagana padhivu Vicky!
rasithen! :)
//மூடிக்கிடக்கும் புத்தகத்தை கையிலேந்தி எங்கோ எங்கோ தொலைந்துபோக வேண்டும், and let it rain till then// Hmmm... :)

Anonymous said...

1.மனதின் ஆழமே படைப்பின் ஆழம்

2. ஒரு பூக்கூடையை உலுக்கினால் கொட்டும் பூக்கள் போல இந்த புத்தகத்தை உலுக்கினால் அதனில் இருந்து விழும் ஓர் கிராமம், சில வீடுகள், முதியதும் இளையதுமான சில மனிதர்கள், ஓர் ஏர் கலப்பை , ஒரு பிடி கரிசல் நிலம் மற்றும் சில கண்ணீர் துளிகள்....

3. புத்தக மனிதரோடு வாசகன் கொள்ளும் உறவு மிக நெருக்கமானது, அது நிஜ மனிதரோடு அவன் கொள்ளும் உறவுகளை போல எதிர்பார்ப்பின் மேல் கட்டமைக்க படுவதில்லை. நிஜ வாழ்வில் அறிந்ததை விட நான் புத்தகம் மூலம் அறிந்த மனிதர்களே அதிகம். சிறு வயதில் கண்களை மூடி தனிமையில் அமரும் நொடியில் கண்ணில் விரியும் காட்சியில் பார்த்ததுண்டு ஒற்றை குதிரையில் அமர்ந்தபடி காவிரி கரையை கடந்து செல்லும் கல்கியின் வந்தியதேவனை...

4.அவர்கள் அருகாமைக்கு செல்ல தேவைப்படுவது ஒரு விழி மூடல் மட்டும்....

ரசித்தேன்

raj said...

wonderfull post. Loved every word of it.

Vignesh said...

@ Alphonsa, Anon, Raj Anna,

நன்றி...

Srinivas said...

Excelent way of writting. :)

eXTReMe Tracker